Tuesday, April 27, 2010

கதையல்ல கசுமாலம்

கதையல்ல கசுமாலம் ... !

விஜய் டிவி இல் மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் கதையல்ல நிஜம் பற்றிய பல நாள் சந்தேகத்திற்கு இன்று விடை கிடைத்துவிட்டது.பிரபல வலை பதிவாளர் யுவகிருஷ்ணா தன்னுடைய பதிவில் இதை விளக்கி உள்ளார்.

ஜெரினா பேகம் என்ற பெண்ணின் கதையை, கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் எப்படி நாடகம் போல நடத்தினார்கள் என்பதை யுவகிருஷ்ணா போட்டு உடைத்துவிட்டார்.2 மாதத்திற்கு  முன்பாக ஒன்று சேர்ந்து விட்ட குடும்பத்தை மீண்டும் அதே கண்ணீருடன், தமிழ் சினிமாவை மிஞ்சி பயங்கர திருப்பங்களுடனும் பல விளம்பர இடைவேளைகளுடனும் லட்சுமி இணை வைத்ததை ஆதரங்களுடன் விளக்கி உள்ளார்.இந்த குறிப்பிட்ட episode பற்றிய மேலும் விவரங்களுக்கு யுவகிருஷ்ணாவின் வலைபக்க இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்சிகளுக்கு எப்படி ஆள் பிடிப்பார்கள் என்று நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது.நாள் தோறும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் இருந்து lead பிடித்து அந்த குடும்பங்களை அணுகி, அழைத்து வந்து லட்சுமி முன்பு உட்கார வைப்பார்கள் போல.

ஆனால், பிரச்சனைகள் இருந்து அது தீர்ந்து போன பல நாட்களுக்குப் பிறகு, அதே பிரச்சனையை மனிதர்கள் மீண்டும் Studio வில் எப்படி நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அடுத்தவர்களின் கண்ணீரை காசாக்கும் இந்த நிகழ்ச்சி எப்போதுமே, எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை.விஜய் டிவி இதை சமூக நோக்கோடு  கண்டிப்பாக நடத்த வில்லை என்பது மட்டும் நிஜம்.குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டால், தயவு செய்து Title Card ல் இந்த நிகழ்ச்சியில் வரும் அனைத்தும்  ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகமே என்று போடுங்கள். 

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு பணக்கார குடும்பமோ, அல்லது பிரபலமான குடும்பமோ இதுவரை கலந்து கொண்டு நான் பார்த்ததே இல்லை.பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களே இங்கு நடிக்கவைக்கப்படுகிறார்கள்.

என்ன காரணத்திற்காக , இதில் பங்கு கொள்ள சம்மதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.கண்டிப்பாக பெரிய தொகை எதுவும் கொடுக்க வாய்ப்பு இல்லை.ஏனெனில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா விற்கே பல மாதம் டிமிக்கி கொடுத்த டிவி அது.அதை பற்றி அவரே ஆனந்த விகடனில் புகார் மனு கட்டுரை எழுதிவிட்டு, இப்போது அடிக்கடி கௌரவ தோற்றத்தில் விஜய் டிவி யில் கருத்து  சொல்கிறார்.

சாரு போன்ற உன்மத்த நிலையை அடைந்த, அனைத்தையும் கடந்த எழுத்தாளர்களே இதுபோன்ற 15 நொடி புகழுக்கு ஆசை படும் போது, கதையல்ல நிஜம் மனிதர்களை குற்றம் சொல்லி பயனில்லை.இந்த 15 நொடி புகழ் என்ற சொற்றொடர்  தலைவர் சுஜாதாவால் சொல்லப்பட்டது.

யாராவது இதற்கான சரியான சமூக காரணத்தை உணர்ந்து அறிந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் விளக்கவும்.

இந்த தலைப்பு கதையல்ல கசுமாலம் விஜய் டிவி யில் இருந்தே எடுக்கப்பட்டது.ஒரு Episode லொள்ளு சபாவின் தலைப்பு கதையல்ல கசுமாலம்.சந்தானம் அதில் லட்சுமி ஆக கலக்கி இருப்பார். 

ஆயிரம் காரணம் இருந்தாலும், சாதாரண மனிதர்களின் இயலாமையையும், கண்ணீரையும் இப்படி காசாக்கப் பார்ப்பது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் .இந்த நிகழ்ச்சியின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்லது ஏன் லட்சுமியோ தங்கள் குடும்ப பிரச்சனைகளை இப்படி கண்ணீருடன் Studio வில் உட்கார்ந்து தீர்ப்பதற்கு தயாரா...?

யுவகிருஷ்ணாவின் பதிவின் இணைப்பு

http://www.luckylookonline.com/2010/04/blog-post_27.html






Add-Tamil