Sunday, June 20, 2010

ராவணன் ஏன் தோற்றான்....?

ராவணன் பற்றி பலவிதமான கருத்துகள் பரப்பப்பட்டு வந்தாலும், பலரின் முடிவுகள் ராவணன் ஒரு படு தோல்விப் படம் என்பதே ஆகும்.மணிரத்னம் ஏன் இப்படி ஒரு ஒரு கதையை தேர்வு செய்தார் என்பதே பெரும் குழப்பமாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கு பெரும்பாடு பட்டு போனால், மணி மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாக தந்தார். 

மணிரத்தினத்தின் தீவிர விசிறி என்பதால் அவரின் பெரும்பாலான படங்களை முதல் நாளே பார்த்து விடும் பழக்கம் உள்ளது.

மணிரத்தினத்தின் தனித்துவமே அவர் கையில் எடுக்கும் கதை கருதான்.சமூக அரசியல் பிரச்சனைகளை வேறு எந்த ஒரு தமிழ் இயக்குனரையும் விட ஒரு படைப்பாக்குவதில் கை தேர்ந்தவர்.ஆனால் அவரிடம் இருந்து இப்படி குழப்பம் வாய்ந்த ஒரு கதையை சத்தியமாக எதிர்பார்க்க வில்லை.சொல்ல நினைத்த எதையுமே  இதில் முழுவதுமாக அவரால் சொல்ல முடியவில்லை.அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.

இந்த படத்தில் அவர் தற்போதைய மாவோயிஸ்டுகள் பற்றிய பிரச்சனையை கையில் எடுத்திருப்பார் என்று நினைத்தேன்.ஒரு வேளை அந்த எதிர்பார்ப்பு தான் பெரிய அலுப்பை படம் பார்க்கும் போது உண்டாக்கி இருக்குமோ என்று கூட அலசி பார்த்தேன். ஆனால் உண்மையிலேயே படத்தில் பல இடங்கள் மணிரத்தினத்தின் ரசிகனாக எரிச்சலையே ஏற்படுத்தியது.

படத்தின் முதல் எரிச்சல் விக்ரம் பக் பக் என்று பேச துவங்கும் போதே தொடங்கி...அவர் மண்டையில் டன் டன் என்று அடிக்கும் போது நமக்கும் சேர்த்து அடிப்பது போல் உள்ளது.
சுஹாசினியின் மேம்போக்கான வசனம் சுஜாதா வின் இழப்பை ஞாபகப்படுத்துகிறது.

மணிரத்தினம் தயவு செய்து உடனடியாக ஒரு வசன கர்த்தாவை கண்டுபிடிக்க  வேண்டும்.இப்படித்தான் குருவிற்கு அழகம் பெருமாளை வசனம் எழுத செய்து படத்தின் கம்பீரத்தையே கெடுத்தார்.இதில் சுகாசினி.

அடுத்த எரிச்சல் கார்த்திக்கின் அறிமுக காட்சி.சத்தியமாக இது மணிரத்னம் படம் தானா என்று சந்தேகமே வந்து விட்டது.கார்த்திக் மரத்திற்கு மரம் தாவும் போது, எது எதாவது குழந்தைகள் படமா இது என்று சந்தேகமே வந்துவிட்டது.அதன் பின்னர் கார்த்திக் அடிக்கும் அனைத்து மொக்கை காமெடியும் அதன் வசனங்களும் கடுப்பாக்குகின்றன.

அடுத்த எரிச்சல் உசுரே போகுதே பாடல். ஐஸ்வர்யாவை கண்ட ஐந்தே நிமிடங்களில் விக்ரம் பாடும் போது வருகிறது.மணிரத்னம் உண்மையிலேயே வைரமுத்துவின் வரிகளை கேட்டாரா என்று தெரியவில்லை.பார்த்த உடனே ஒரு பெண்ணை அவளிடம் பேசி பழகாமல், ஊடலுக்கு அழைக்கும் வரி உடைய பாடலை எப்படி அங்கே பொருத்தினார்கள் என்று புரியவில்லை.ஒரு வேளை மணிரத்னம், தமிழ் ரசிகர்கள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

இந்த படத்தின் இடம் பொருள் எதுவும் தமிழ் சூழலுக்கு பொருந்துவது போலவே இல்லை.மேகமலை என்பது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமம்.அதை எடுத்த உடனே திருநெல்வேலி என்று சொல்லும் தைரியம் எப்படி வந்தது என்று  தெரியவில்லை.மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் வெற்றியே எந்த விசயத்திலும் அதிக Detail போவதே ஆகும்.ஆனால் இதில் கதையிலோ, திரைகதையிலோ அவர் அப்படி போனது போல் தெரியவில்லை.

இதில் வீராவின்  பாத்திரப்  படைப்பே மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது.வீராவை ஏன் அரசாங்கமும் போலிசும் எதிர்க்கிறது என்பதை அழுத்தமாக சொல்ல தவறிவிட்டார்.ஒரு வேளை அதை எடுத்து பின் தன்னுடைய Corporate நண்பர்களுக்காக அந்த காட்சிகளை நீக்கி விட்டாரோ என்னவோ.

இந்த படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு  காரணம் கண்டிப்பாக அதன் பாத்திரப் படைப்புகளுக்கும், அவைகளின் செயல்பாடுகளுக்கும் உள்ள முரண்பாடுதான்.

ஆனால் படம் முழுவதும் ஒரு மெல்லிய காதல் இழை வழிந்தோடுகிறது.அது விக்ரம் ஐஸ்வர்யா ராய் மீது கொண்ட காதலும், ஐஸ்வர்யாவிற்கு விக்ரம் மீது ஏற்படும் மரியாதையும் ஈர்ப்பும், தன் கணவனின்  மீது உள்ள காதலும் நம்பிக்கையும் என்று மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு எரிச்சல்களையும் மீறி அதை ரசிக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு.அதை சத்தியமாக வார்த்தைகளால் சொல்லவே முடியாது.படத்தின் ஒளிப்பதிவும் இசையும் கை கொடுக்கா விட்டால், படம் கண்டிப்பாக பெரிய குப்பை தான்.

நம்மால் சீட்டில் உட்கார முடிவதற்கு ஒரே கரணம் இவை இரண்டும் தான்.

கன்னத்தில் முத்தமிட்டால் எடுத்தவரா இதை எடுத்தார் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை.

கதையை தேர்ந்தெடுப்பதிலும், திரைக்கதை உருவாக்குவதிலும் இப்படி கோட்டை விட்டுவிட்டு அதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தது மிகப் பெரிய தவறாகும்.

ரீமேக்குகள்(ராமாயணத்தின் remake) எப்போதுமே கை கொடுக்காது என்பதை மணிரத்னம் நன்றாக புரிந்து கொண்டு இருப்பார்.

ஹிட் பாடல்களும், விறுவிறுப்பான திருப்பங்களும் அதை காட்ட பலமான தொழில்நுட்பமும் மட்டும் இருந்தால் படம் வெற்றி அடையும் என்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் கண்டிப்பாக உணர்த்திருப்பார்.

இன்னும் மணிரத்னம் இப்படி ஒரு படம் எடுத்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.ஒரு வேளை ராவணனை புரிந்து கொள்ளும் பக்குவம் என்னிடம் இல்லையா என்ற சந்தேகமே உள்ளது.

எப்படி இருந்தாலும் ஒரு பக்குவப்பட்ட ரசிகனை  சீட்டில் உட்கார வைக்க முடியாத படைப்பு கண்டிப்பாக தோல்வி அடைந்த ஒன்றே.

பாடல்களே இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் லட்சியம்.அதற்காக கொடு போட்டா , கெடா கெடா போன்ற பாடல்களை முழுவதுமாக வைத்து விட்டு காட்டு சிறுக்குயை தூக்கியது மகா கொடுமை.காட்டு சிறுக்கியின் இன்னொரு version படத்தில் வருகிறது.மிக மிக அற்புதமான படைப்பு ரகுமானிடம் இருந்து.

பின்னணி இசையில் பல இடங்களில் தெரிந்தாலும் இது அவரின் முழு திறமை காட்டப்பட்ட படம் அல்ல.

படத்தில் பலகாட்சிகள் மேம்போக்காக சென்று விடுகின்றன.அதற்கு வசனமும் ஒரு காரணம்.ஒன்றிரண்டு காட்சிகளை  தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை.

கடைசியில் ரகுமானின் நான் வருவேன் மட்டும் மனதில் கேட்டு கொண்டே உள்ளது.

ஆனால் ஒரு படத்தை பற்றி இவ்வளவு பேசுவதற்கு உள்ளதே பெரிய விஷயம்.மணிரத்தினம் என்ற உன்னத படைப்பாளியின் உழைப்பே அதற்கு காரணம்.

இணையம் முழுவதும் ராவணனை இப்படி கிழித்து தொங்க போட காரணம், இந்த உன்னத படைப்பாளியிடம்  அனைவரும் வைத்திருந்த பெரும் நம்பிக்கைதான்.ஆனால் அதில் ஒரு 50% கூட அவரால் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற கோபம் தான் இப்படி வெளிப்படுகிறது. 

நாங்கள் மணிரத்தினமிடமிருந்து ஒரு மெகா பட்ஜெட், பிரம்படமான படைப்பை எதிர் பார்ப்பதே இல்லை.எதார்த்தத்தை உள்ளதை உள்ள படியே கட்டும் சமூக  மற்றும் அரசியல் சார்ந்த படைப்பைத்தான்.அவரும் இதுநாள் வரை அப்படிபட்ட படைப்புகளைத்தான் ரோஜாவிலிருந்து குரு வரை கொடுத்துள்ளார்.அதை ராவணனில்
விட்டதே, அவரின் ரசிகர்களிடமே தோற்றதற்கு முக்கிய காரணம் . 





Tuesday, April 27, 2010

கதையல்ல கசுமாலம்

கதையல்ல கசுமாலம் ... !

விஜய் டிவி இல் மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் கதையல்ல நிஜம் பற்றிய பல நாள் சந்தேகத்திற்கு இன்று விடை கிடைத்துவிட்டது.பிரபல வலை பதிவாளர் யுவகிருஷ்ணா தன்னுடைய பதிவில் இதை விளக்கி உள்ளார்.

ஜெரினா பேகம் என்ற பெண்ணின் கதையை, கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் எப்படி நாடகம் போல நடத்தினார்கள் என்பதை யுவகிருஷ்ணா போட்டு உடைத்துவிட்டார்.2 மாதத்திற்கு  முன்பாக ஒன்று சேர்ந்து விட்ட குடும்பத்தை மீண்டும் அதே கண்ணீருடன், தமிழ் சினிமாவை மிஞ்சி பயங்கர திருப்பங்களுடனும் பல விளம்பர இடைவேளைகளுடனும் லட்சுமி இணை வைத்ததை ஆதரங்களுடன் விளக்கி உள்ளார்.இந்த குறிப்பிட்ட episode பற்றிய மேலும் விவரங்களுக்கு யுவகிருஷ்ணாவின் வலைபக்க இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்சிகளுக்கு எப்படி ஆள் பிடிப்பார்கள் என்று நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது.நாள் தோறும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் இருந்து lead பிடித்து அந்த குடும்பங்களை அணுகி, அழைத்து வந்து லட்சுமி முன்பு உட்கார வைப்பார்கள் போல.

ஆனால், பிரச்சனைகள் இருந்து அது தீர்ந்து போன பல நாட்களுக்குப் பிறகு, அதே பிரச்சனையை மனிதர்கள் மீண்டும் Studio வில் எப்படி நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அடுத்தவர்களின் கண்ணீரை காசாக்கும் இந்த நிகழ்ச்சி எப்போதுமே, எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை.விஜய் டிவி இதை சமூக நோக்கோடு  கண்டிப்பாக நடத்த வில்லை என்பது மட்டும் நிஜம்.குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டால், தயவு செய்து Title Card ல் இந்த நிகழ்ச்சியில் வரும் அனைத்தும்  ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகமே என்று போடுங்கள். 

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு பணக்கார குடும்பமோ, அல்லது பிரபலமான குடும்பமோ இதுவரை கலந்து கொண்டு நான் பார்த்ததே இல்லை.பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களே இங்கு நடிக்கவைக்கப்படுகிறார்கள்.

என்ன காரணத்திற்காக , இதில் பங்கு கொள்ள சம்மதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.கண்டிப்பாக பெரிய தொகை எதுவும் கொடுக்க வாய்ப்பு இல்லை.ஏனெனில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா விற்கே பல மாதம் டிமிக்கி கொடுத்த டிவி அது.அதை பற்றி அவரே ஆனந்த விகடனில் புகார் மனு கட்டுரை எழுதிவிட்டு, இப்போது அடிக்கடி கௌரவ தோற்றத்தில் விஜய் டிவி யில் கருத்து  சொல்கிறார்.

சாரு போன்ற உன்மத்த நிலையை அடைந்த, அனைத்தையும் கடந்த எழுத்தாளர்களே இதுபோன்ற 15 நொடி புகழுக்கு ஆசை படும் போது, கதையல்ல நிஜம் மனிதர்களை குற்றம் சொல்லி பயனில்லை.இந்த 15 நொடி புகழ் என்ற சொற்றொடர்  தலைவர் சுஜாதாவால் சொல்லப்பட்டது.

யாராவது இதற்கான சரியான சமூக காரணத்தை உணர்ந்து அறிந்தால், தயவு செய்து பின்னூட்டத்தில் விளக்கவும்.

இந்த தலைப்பு கதையல்ல கசுமாலம் விஜய் டிவி யில் இருந்தே எடுக்கப்பட்டது.ஒரு Episode லொள்ளு சபாவின் தலைப்பு கதையல்ல கசுமாலம்.சந்தானம் அதில் லட்சுமி ஆக கலக்கி இருப்பார். 

ஆயிரம் காரணம் இருந்தாலும், சாதாரண மனிதர்களின் இயலாமையையும், கண்ணீரையும் இப்படி காசாக்கப் பார்ப்பது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் .இந்த நிகழ்ச்சியின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்லது ஏன் லட்சுமியோ தங்கள் குடும்ப பிரச்சனைகளை இப்படி கண்ணீருடன் Studio வில் உட்கார்ந்து தீர்ப்பதற்கு தயாரா...?

யுவகிருஷ்ணாவின் பதிவின் இணைப்பு

http://www.luckylookonline.com/2010/04/blog-post_27.html






Saturday, March 27, 2010

கடவுளின் எடை

கடவுளின் எடை


ஒரு வருடத்திற்கு முன்பு மிக பரபரப்பாக Large Hadron Collider (LHC) பற்றி பேசப்பட்டது. இந்த LHC உலகிலேயே  மிக பெரிய Particle Accelerator(துகள் முடுக்கி) ஆகும்.இந்த LHC சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் ஜெனிவாவிற்கு  அருகில் 27KM சுற்றளவில் கட்டப்பட்ட Circular or Cyclic Particle Accelerator ஆகும்.Particle Accelerator என்பது ஒரு இயற்பியல் சோதனை கருவி. இந்த LHC ம் ஒரு வித சோதனை கருவிதான்.ஆனால் அளவிலும் சக்தியிலும் மிக பெரியது.

இந்த LHC இது வரை சுமார் 13 Billion $ரை தின்றுள்ளது.ஏறக்குறைய 100 நாடுகள், 3000 க்கும் அதிகமான ஆராய்ச்சி நிறுவனங்கள், லட்சக்கணக்கான அறிவியல் அறிஞயர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டுள்ளது .

ஏன் இவ்வளவு செலவு, இவ்வளவு முயற்சி...?இந்த பிரபஞ்சம் Big Bang எனப்படும் பெரு வெடிப்பு கோட்பாட்டினால் உருவாக்கப்பட்டது என்பது, பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அப்படி நிகழ்ந்த இந்த பெரு வெடிப்பால், உருவானது தான் எல்லாமே.இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே அணுக்களால் ஆக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.அணுக்களுக்குள் உள்ள Electrons, Protons, Neutrons, Nucleus போன்றவற்றை பற்றி நாம் அறிந்திருப்போம். 

ஆனால் இவை போக இன்னும் மனிதனால் கண்டறியப்படாத Particles (துகள்கள்) இன்னும் பல இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் Quarks (குவர்க்க்ஸ்) என்ற துகள் ஆகும்.

Quark என்ற துகளைப்பற்றின கோட்பாடு 1964 இல் முன்வைக்கப்பட்டு, 1995 ம் ஆண்டுதான் முழுவதுமாக  நிருப்பிக்ப்பட்டது. இந்த Quark கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் Hadron  என்ற அடிப்படை துகள்களை உருவாக்குகின்றன என்றொரு கோட்பாடு உள்ளது.

இந்த Hadron இல் இருந்துதான் Large Hadron Collider என்ற பெயர் உருவானது.Large Hadron Collider இல் Proton கதிர்வீச்சு இரு பக்கங்களில் இருந்தும் அதிவேகமாக அனுப்பப்பட்டு, இரண்டும் 7 Tev ஆற்றலில் மோதவைக்கப்படும் போது, Big Bang எனப்படும், பெரு வெடிப்பை செயற்கையாக உருவாக்குவார்கள். அப்போது, ஆயிரக்கணக்கான துகள்கள் ஒரே சமயத்தில் வெளிப்படும்.

அப்படி வெளிப்படும் துகள்களை உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இதுவரை கண்டறியப்படாது துகள்களை தேடுவார்கள்.அல்லது ஏற்கனவே  கோட்பாட்டு உள்ள துகள்களுக்கு, நிரூபணம் தேடுவார்கள்.

Big Bang பெருவெடிப்பு நடந்த போது உருவானவற்றில் வெறும் 4% மட்டுமே இதுவரை நம்மால் தெரிந்து கொள்ளப்பட்டுள்ள பருப்பொருள் (Matter) ஆகும்.மீதம் உள்ள 96% Anti Matter எனப்படும் நம்மால் புரிந்து கொள்ளப்படாத ஒன்றாகும்.

இந்த Antimatter எதனால் உருவாக்கப்பட்டது, அதை இயக்கும் விசை என்ன, போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை அறிய முடியவில்லை.

அதுப்போல் இன்றுவரை விஞ்ஞான உலகால் Mass (நிறை) என்பதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. 

Photon களுக்கு நிறை இல்லை.அதே சமயம் Electron, Quarks போன்ற துகள்களுக்கு நிறை உண்டு.Peter Higgs என்ற இயற்பியல் விஞ்ஞானி இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒருவகை நிலை (Filed), ஒருவகை விசையுடன் செயல் படுவதாகவும், அந்த Field தான் நிறையை அளிக்கிறது என்றொரு கோட்பாட்டை கொண்டு வந்தார்.அதற்க்கு Higg's Field என்று பெயர்.

இந்த கோட்பாடு நிரூபிக்கப்பட்டால் அந்த Filed இல் உள்ள துகள்களும் (Particles) நிருபிக்கப்படும். அந்த துகள்கள்தான் Higg's Particle என்றும் God Particle (கடவுள் துகள்) என்றும் அழைக்கப்படுகிறது. 

ஏற்க்கனவே உள்ள Particle Accelerator களின் ஆற்றல் கொள்ளளவு இந்த கடவுள் துகள்களின் இருப்பைப் பற்றி ஆராய போதுமானதாக இல்லை.

அதற்காகத்தான் இந்த LHC கட்டப்பட்டது.இதற்கு  அடுத்த படியாக இதை விட பெரிய Particle Accelerator ஆனா Internation Linear Accelerator ரை உருவாக்குவது பரிசீலனையில் உள்ளது. 

இந்த LHC ஆண்டுக்கு 15 Pera bytes(15 Million GB) Data வை உருவாக்கும். இந்த அனைத்து தகவல்களும் 4 விதமான தளங்களில் பிரித்து உபயோகிக்கப்படும்.Grid Computing எனப்படும் மேக கணினியம் முறையில் அனைத்து தகவல்களும் நூற்றுக்கணக்கான பல்கலைகழகங்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பிரித்து கொடுத்து ஆராயப்படும்.

அப்படி ஆராய்கையில், மேலே குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளுக்கு நிரூபணம் கிடைக்க வாய்ப்புள்ளது.மேலும் Unified Field Theory க்கும் நிரூபணம் கிடைக்கும் வைப்பு உள்ளது. UTF பற்றி விரிவாக விரைவில் காண்போம்.

வரும் மார்ச் 31 முதல் LHC இல்  7 TeV ஆற்றலில் மோதல் நிகழப்போகிறது.எப்படியும் இந்த ஆய்வு முடிய மேலும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். அப்படி முடியும் போது ஒரு வேளை விஞ்ஞானிகள் எதிர்பார்த்த துகள்கள் கண்டுபிக்கப்பட்டால், கடவுளின் எடை கண்டிப்பாக தெரிந்துவிடும்.



Wednesday, March 24, 2010

Taxi No. HR 1729. டாக்ஸி எண்.ஹரா 1729

Taxi No. HR 1729 டாக்ஸி எண்.ஹரா 1729  


ஸ்ரீனிவாஸ ஐயங்கார் ராமானுஜன் என்ற மாபெரும் கணித மேதையின் மேதமையின் ஒரு சிறு பகுதிதான் இந்த தலைப்பு.ராமானுஜர் ஒரு முறை லண்டனில் மருத்துவ மனையில் இருந்த போது அவரை பார்க்கச்சென்ற ஹார்டி என்ற ஆராய்ச்சியாளர், தான் 1729 என்ற டாக்ஸ்யில் வந்ததாகவும், இந்த டாக்ஸி எண்ணில் பெரிய சுவாரசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லயே என்று பேச்சு வாக்கில் சொல்ல, உடனே ராமானுஜர், இல்லை இல்லை 1729 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்று கூறி விட்டு உடனே அதற்க்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அதாவது 1729 என்ற எண்தான் இரு வழிகளில் மூன்றை அடுக்காக கொண்ட இரு எண்களின் கூட்டுதொகையில் வரும் மிக சிறய எண் ஆகும்.மேலும் இதன் இரண்டு சிறப்புகளையும் உடனே படுக்கையில் இருந்தவாரே விளக்கியுள்ளார்.

                                               1729=1^3+12^3=9^3+10^3.\,

சற்று நினைத்து பாருங்கள், எந்த அளவிற்கு கணிதத்திலேயே மூழ்கி இருந்தால் உடனே இவ்வாறு பதில் அளிக்க முடியும்.இந்த 1729 என்ற எண்தான் ராமானுஜன் நம்பர் (Ramanujan Number) என்று, அவரை கௌரவிக்க வைக்கப்பட்டது.

ஸ்ரீனிவாஸ ஐயங்கார் ராமானுஜன் ஈரோட்டில் 1887 லில் பிறந்தவர்.தனது பத்தாவது வயதில் இருந்து கணிதத்தை சுயமாக பழக தொடங்கி, 14 வது வயதில் நூற்று கணக்கான தேற்றங்களை உருவாக்க தொடங்கி, பள்ளியில் கணிதத்தை தவிர மற்ற பாடங்களில் தோற்று, சரியான மேல் படிப்பு போக முடியாமல், சென்னையில் அக்கௌன்ட் ஜெனரல்  அலுவலகத்தில் சாதாரண  வேளை பார்த்து கொண்டே தனது கணித வேலைகளை தொடர்ந்தார்.அந்த நேரத்தில் தான் இயற்றிய தேற்றங்களை கேம்பிரிஜ் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியில் இருந்த ஹார்டி என்பவருக்கு அனுப்பினார்.இவருடைய தேற்றங்களை பார்த்து, அவர் உடனே ராமானுஜரை லண்டனுக்கு அழைத்து கொண்டார் .

ராமானுஜரின் 4000 க்கும் மேற்ப்பட்ட தேற்றங்கள் இன்று வரை உலக கணித மேதைகளால் வியக்கப்பட்டு, ஒவ்வொரு கணித மாநாடுகளிலும் ஆயிரக்கணக்கான முறை விவாதிக்கப்பட்டு வியக்கப்பட்டு வருகிறது.இன்று வரை அவரின் ஒவ்வொரு தேற்றத்திற்கும் நிரூபணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ராமானுஜர் Hypergeometric series, Elliptic functions, Prime numbers, Bernoulli`s numbers, Divergent series, Continued fractions, Elliptic Modular equations, Highly Composite numbers, Riemann Zeta functions, Partition of numbers, Mock-Theta functions ஆகியவற்றில் செய்த கண்டுபிடுப்புகள் மகத்தானவை.அவருடைய பல தேற்றங்கள் இன்று வரை புரிந்து கொள்ளப்படாமல் உள்ளன.

ராமானுஜர் முடிவுகளை நோக்கி என்றுமே கணக்கை தொடங்கியது இல்லை.Infinite Series இல் அவருடைய பங்களிப்பு மிகப்பெரியது. கிர்ய்ப்டோலோஜி தொடங்கி ராக்கெட் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், மெட்டிரியல் சயின்ஸ் வரை இன்று ராமானுஜரின் பங்களிப்பு உண்மையில் மிகப்பெரியது.

ராமானுஜரின் வாழ்வை போலவே எடுக்கப்பட்ட ஆங்கிலப் படம் Good Will Hunting.அதில் கல்லூரியில் தரையை சுத்தம் செய்யும் ஒரு இளைஞனுக்கு, இயல்பிலேயே மிக அதிக கணித அறிவு இருக்கும்.அவனை சுற்றி நகரும் படம் தான் Good Will Hunting.

32 வயதில் மரணமடைந்த ராமானுஜரின் வாழ்வு, உண்மையில் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும்.இன்றுவரை ராமானுஜருக்கு உலகளவில் கிடைத்த மரியாதைகள் மிக அதிகம்.

ஆனால் நம் நாட்டில் வழக்கம் போல் ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.ராமானுஜரின் நூற்றாண்டு நிறைவடையப் போகிறது.இன்று வரை நம் நாட்டில் எவ்வளவு ராமானுஜர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிய வில்லை.

ராமானுஜருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை, அவரைப்போல் இன்னும் பலர் இங்கிருந்து உருவாவதே ஆகும்.

ராமானுஜர் கணிதத்தில் எவ்வளவோ புதிர்களை உருவாக்கி, அதை தீர்த்து வைத்தார்.ஆனால் அவருடைய வாழ்க்கையின் புதிர் மட்டும் இன்று வரை விடை காணப்படாமலே உள்ளது.



Tuesday, March 23, 2010

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?


சில மாதங்களாக இந்திய பத்திரிக்கைகள் விரட்டிக் கொண்டுள்ள பிடி கத்தரிக்காய்க்குப் பின்னால் உள்ள கதை மிக பெரியதும், ஆபத்துமானதும் ஆகும்.பிடி கத்தரிக்காய் என்பது Trans Genetic என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட அல்லது மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் ஆகும்.கத்தரிக்காய் உடன் Cry1Ac என்ற மரபணுவை செலுத்தி இந்த வகை பிடி கத்தரிக்காய் உருவாக்கப்பட்டது.இந்த Cry1Ac  என்ற மரபணு  Bacillus thuringiensis  என்ற, மண்ணில் காணப்படும் பாக்டிரியாவில்  இருந்து பெறப்பது ஆகும்.

இந்த மாபெரும் சோதனையை 8 ஆண்டு காலமாக செய்து முடித்த இந்திய நிறுவனம் Maharashtra Hybrid Seeds Company Limited.(Mahyco). ஆனால், இது Monsanto என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செய்த கண்டுபிடிப்பாகும்.

இந்த கதை தொடங்கியது சென்ற வருடம் அக்டோபரில்.Mayco தனது கண்டுபிடிப்பை Genetic Engineering Approval Committee (GEAC) of India விடம் சமர்பித்து, இந்தியாவில் இந்த பிடி கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி வாங்கி விட்டது. எந்த ஒரு செயல் முறை நிரூபணமும் இல்லாத இந்த பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய கொந்தளிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

பொதுவாக மரபணு மாற்றப்பட்ட விதைகளினால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படுவதில், மிக முக்கியமானவைகள் - பயிர்கள், பூச்சிகளுக்கு  எதிரான அதிகப்படியான எதிர்ப்பு சக்தியுடன் வளரும் மற்றும் பல மடங்கு அதிக விளைச்சல் தரும் என்பதேயாகும்.இந்தியளவில்  ஆண்டு ஒன்றுக்கு 1000 கோடி ருபாய் வரை பூச்சிகளால் கத்தரிக்காய் விளைச்சலுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகிறது.எனவே இந்த பிடி கத்தரிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்ற மாயை அரசால்   உருவாக்கப்பட்டது. 

விவசாய துறை அமைச்சர் சரத் பவார்   GEAC அனுமதி வழங்கிய பிறகு மத்திய அரசால் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று மிக சீரியஸ் ஆக காமெடி செய்து பின்னர் இது சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கவனிக்க வேண்டியது என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

அதன் பின்னர்தான் இதன் கடுமையான விளைவுகளை சுற்று சூழல் ஆதரவாளர்கள் கத்தி கத்தி சொன்ன பிறகு மீடியாக்கள் விழித்து கொண்டு நாடு முழுவதும் இதன் வீரியம் தெரிய தொடங்கியது.

ஏன் இந்த பிடி கத்தரிக்காய்க்கு இவ்வளவு எதிர்ப்புகள்...?மரபணு மாற்றப்பட்ட உயிர்களில் அது கத்திரிக்காயை இருந்தாலும் காயத்திரியாய்  இருந்தாலும், பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆவதர்க்கான சாத்திய கூறுகள் மிக அதிகம்.அதுவும் பிடித்தது பிள்ளையாரா  இல்லை குரங்கா இன்று கண்டறிவதற்கே 40-50 வருடங்கள் ஆகலாம்.

அதாவது இப்போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பயிர் செய்து, விளைந்த கத்திரிக்காயை  நாம் அவியல் வைத்து சாப்பிட்டு, பின் நமக்கு திருமணமாகி, நமக்கு ஒரு குழந்தை பிறந்து அவனுக்கோ அல்லது அவளுக்கோ  20 வயது ஆகும்போது, அவர்களுக்கு தீடீர் என்று வரும் வியாதிக்காக மருத்துவரிடம் செல்லும்போதுதான் அன்று அவியல் சாப்பிட்ட கத்திரிக்காயில் இருந்த பிரச்சனைகள்  குறித்து உண்மைகள் வெளிப்படும். 

இந்த பிடி கத்தரிக்காய் மூலம் கிட்னி முதல் நுரையீரல் வரை பாதிக்க  வாய்ப்பு உண்டு என்று சர்வதேச நாடுகள் அறிவித்த போதும் இதை GEAC எப்படி அனுமதித்தார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுப்பப்பட்டது.ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இந்த பிடி கத்தரிக்காய்யை தடை செய்து உள்ளது. 

இந்த அனுமதிக்குப் பின்னால் GEAC விஞ்ஞானிகளுக்கும்,  அமெரிக்க நிறுவனமான Monsanto விற்கும் அமெரிக்க அரசின் தூண்டுதலினால் மிக பெரிய லாபி நடந்திருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டது.

GEAC இதற்கான அனுமதியை, விஞ்ஞானிகளின் வெறும் பேப்பர் நிரூபணங்களை வைத்து கொடுத்ததுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுபோவது, இது போன்ற இடங்களில் தான்.ஒரு வேளை இது பெரிய பிரச்னை ஆக்கப்படாமல், நாடு முழுவதும் இந்த விதைகள் பயிரிடப்பட்டு நாம் அனைவரும் மரபணு மாற்றப்பட்ட  அவியல் உண்டிருந்தால், நமக்கு அடுத்த சந்ததி கண்டிப்பாக அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்.

நம்முடைய சமுதாய பொறுப்பின்மையும், சகிப்புத்தன்மையும் பல இடங்களில் காசாக்கப்படுகின்றன, சில இடங்களில் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்குகின்றன.

நம்மை சுற்றி நடப்பவற்றை நாம் கேள்வி கேட்காமல் கடந்து போவதால் தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நம்மை மிக சுலபமாக ஏமாற்றுகிறார்கள்.

அதிஷ்டவசமாக பிடி கத்தரிக்காய் விசயத்தில் அப்படி எதுவும் நடக்க வில்லை.ஆனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வளவோ முடிவுகள், நாள் தோறும் நம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு தான் வருகின்றன.அதை வெளியே  கொண்டு வந்து தடுக்கும் திறமையும் உரிமையும் ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளன.




Monday, March 22, 2010

கூகுளும் சீனாவும் சமூக சுதந்திரமும்

கூகுளும் சீனாவும் சமூக சுதந்திரமும்
   
கூகுளுக்கும் சீனாவுக்கும் என்னதான் பிரச்சனை...?சமீப காலமாக செய்திகளில் கூகிள் தன்னுடைய சீனத்து செயல்பாடுகளை நிறுத்தி கொள்ள போகாதாக அடிக்கடி சொல்லப்பட்டு வந்த வேளையில் தற்போது அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது.


நேற்று முதல் கூகிள்.சின் என்ற இனைய முகவரியை கூகிள் நிறுத்திவிட்டது.அனைத்து கூகிள்.சின் பார்வையாளர்களும் இனி கூகுளின் ஹாங் காங் இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.  


பல நாட்களாக நடந்து வந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவிருக்கு வந்து விட்டது.இதன் தொடக்க புள்ளி, சீன அரசு கூகுளை தணிக்கை செய்த பிறகுதான், அதன் தேடல் முடிவுகளை சீனாவில் வெளியிட அனுமதிக்க முடியும் என்று சொல்லி கூகுளை தணிக்கை செய்ய தொடங்கியது.கூகிள் தணிக்கை செய்ய தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பனிப் போர் நடந்து  வருகிறது.


சீனா ஏன் கூகுளை தணிக்கை செய்ய வேண்டும் ...? ஏனெனில் சீன அரசு அதன் மக்களை சுதந்திர பார்வையோடு வாழ வைக்க விரும்பியதே இல்லை.சீனாவின் இந்த அசுர வளர்ச்சி அதன் சர்வதிகார முதலாளித்து தத்துவங்களால் வந்ததே தவிர, உண்மையான ஜனநாயக கற்றை சுவாசித்து பெறப்பட்டதல்ல.


மேலும், சீனாவின் பணக்கார மற்றும் ஏழைகளின் விகிதம் மிகவும் மோசமானதாக வளர்ந்து விட்டது.சிவாஜியில் ரஜினி சொல்வது போல பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான்.


இது அனைத்தையும் விட சீனாவின் மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியப்படாமல் மறைக்கப் படுகின்றன. இவ்வளவு கட்டுபாடுகள் பிரச்சனைகள் உள்ள சீனா கூகுளின் மூலம் இந்த உண்மைகள் சீனா மக்களுக்கும் உலகிற்கும் தெரிய வந்து விடுமோ என்று அஞ்சித்தான், கூகுளை தணிக்கை செய்து தன்னுடைய நாட்டில்  அனுமதித்தது .


அதே நேரத்தில், சீனாவில் உள்ள பல மனித உரிமை ஆர்வலர்களின் ஜிமெயில் அக்கௌன்ட் கள் திருட்டுதனமாக வேவு பார்க்கப்பட்டு வந்தன.இதை கூகிள் தனது அதிகாரபூர்வ ப்ளாகில் வெளியிட்டுள்ளது.இங்கிருந்துதான் பிரச்சனை பெரிதாகி விட்டது.


கூகிள் தனது சீனத்து செயல்பாடுகளை நிறுத்த போவதாக அறிவிக்க தொடங்கியது.
சீனாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரோ, ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடர்வதும், நிறுத்துவதும் அதை பொருத்தது.ஆனால், சீனாவில் செயல்படும் போது அது எங்களின் சட்ட திட்டங்களை பின்பற்றித்தான் செல்ல வேண்டும் என்று சொல்லி கூகுளின் அனைத்து செயல்பாடுகளும் கண்டிப்பாக தணிக்கை செய்யப்படும் என்று சொல்லிவிட்டார்.


இறுதியில் கூகிள் தனது வெளியேற்றத்தை நிறைவேற்றி விட்டது.


உலக மகா நிறுவனகளின் சீனா பற்றிய எண்ணங்கள் கண்டிப்பாக மாற தொடங்கி விட்டது.எவ்வளவு பெரிய முன்னேற்றமும் கட்டிபோடபட்ட சமூகத்திற்கு எந்த நன்மையும் கொடுக்க முடியாது.


நாட்டின் முன்னேற்றத்திற்கு, தனி மனித மற்றும் சமூக  சுதந்திரத்தை விலையாக கொடுப்பதை ஒரு போதும்  நினைத்து கூட பார்க்க முடியவில்லை.


நம்முடைய மிக பெரிய பலம் நம் சுதந்திரம் என்பதை நம்மால் உணரவே முடியாது.ஏனெனில் அடக்குமுறையை அனுபவிக்கதா வரையில் சுதந்திரத்தின் அருமை தெரிவதில்லை.





Add-Tamil